EPISODE · Jul 31, 2022 · 18 MIN
PS-S1E12-பொன்னியின் செல்வன்/E12-நந்தினி(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Nandhini / Puthu Vellam
from இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் · host RJ SHAKTHI
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Nandhini கொள்ளிடக் கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதைச் சொல்ல வேண்டும் அல்லவா? ஆழ்வார்க்கடியான் படகில் ஏறியதை ஆட்சேபித்த சைவப் பெரியார், படகு நகரத் தொடங்கியதும், வந்தியத்தேவனைப் பார்த்து, "தம்பி! உனக்காகப் போனால் போகிறது என்று இவனை ஏறவிட்டேன். ஆனால் ஓடத்தில் இருக்கும் வரையில் இவன் அந்த எட்டெழுத்துப் பெயரைச் சொல்லவே கூடாது. சொன்னால் இவனை இந்தக் கொள்ளிடத்தில் பிடித்துத் தள்ளிவிடச் சொல்லுவேன். ஓடக்காரர்கள் என்னுடைய ஆட்கள்!" என்றார். "நம்பி அடிகளே! தங்களுடைய திருச்செவியில் விழுந்ததா?" என்று வந்தியத்தேவன் கேட்டான். "இவர் ஐந்தெழுத்துப் பெயரைச் சொல்லாதிருந்தால் நானும் எட்டெழுத்துத் திருநாமத்தைச் சொல்லவில்லை!" என்றான் ஆழ்வார்க்கடியான். "சாஷாத் சிவபெருமானுடைய பஞ்சாட்சரத் திருமந்திரத்தைச் சொல்லக் கூடாது என்று இவன் யார் தடை செய்வதற்கு? முடியாது! முடியாது! கற்றூணைப்பூட்டி கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே!" என்று சைவப் பெரியார் கம்பீர கர்ஜனை செய்தார். "நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்!" என்று ஆழ்வார்க்கடியான் உரத்த குரலில் பாடத் தொடங்கினான். "சிவ சிவ சிவா!" என்று சைவர் இரண்டு காதிலும் கைவிரலை வைத்து அடைத்துக் கொண்டார். ஆழ்வார்க்கடியான் பாட்டை நிறுத்தியதும், சைவர் காதில் வைத்திருந்த விரல்களை எடுத்தார். ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனைப் பார்த்து, "தம்பி! நீயே அந்த வீர சைவரைக் கொஞ்சம் கேள். இவர் திருமாலின் பெயரைக் கேட்பதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறாரே? ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் பாத கமலங்களை அலம்பி விட்டுத்தான் இந்தக் கொள்ளிட நதி கீழே வருகிறது. பெருமாளின் பாதம்பட்ட தீர்த்தம் புண்ணிய தீர்த்தம் என்றுதானே சிவபெருமான் திருவானைக்காவலில் அந்தத் தண்ணீரிலேயே முழுகித் தவம் செய்கிறார்?" என்று சொல்லுவதற்குள்ளே சைவப் பெரியார் மிக வெகுண்டு ஆழ்வார்க்கடியான் மீது பாய்ந்தார். படகில் ஓரத்தில் இரண்டு பேரும் கைகலக்கவே, படகு கவிழ்ந்து விடும் போலிருந்தது. ஓடக்காரர்களும் வந்தியத்தேவனும் குறுக்கிட்டு அவர்களை விலக்கினார்கள். "பக்த சிரோமணிகளே! நீங்கள் இருவரும் இந்தக் கொள்ளிட வெள்ளத்திலே விழுந்து நேரே மோட்சத்துக்குப் போக ஆசைப்படுவதாகத் தோன்றுகிறது. ஆனால் எனக்கு இன்னும் இந்த உலகத்தில் செய்ய வேண்டிய காரியங்கள் மிச்சமிருக்கின்றன!" என்றான் வந்தியத்தேவன். ஓடக்காரர்களில் ஒருவன், "கொள்ளிடத்தில் விழுந்தால் மோட்சத்துக்குப் போவது நிச்சயமோ, என்னமோ தெரியாது! ஆனால் முதலையின் வயிற்றுக்குள் நிச்சயமாகப் போகலாம்! அதோ பாருங்கள்!' என்றான். அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் முதலை ஒன்று பயங்கரமாக வாயைத் திறந்து கொண்டு காணப்பட்டது. "எனக்கு முதலையைப் பற்றிச் சிறிதும் அச்சம் இல்லை; கஜேந்திரனை ரட்சித்த ஆதிமூலமான நாராயண மூர்த்தி எங்கே போய்விட்டார்?" என்றான் ஆழ்வார்க்கடியான். "எங்கே போய்விட்டாரா? பிருந்தாவனத்து கோபிகா ஸ்திரீகளின் சேலைத் தலைப்பில் ஒரு வேளை ஒளிந்து கொண்டிருப்பார்!" என்றார் சைவர். "அல்லது பத்மாசுரனுக்கு வரங்கொடுத்துவிட்டு அலறிப் புடைத்துக் கொண்டு ஓடியது போல் சிவனுக்கு இன்னொரு சங்கடம் ஏற்பட்டிருக்கலாம்; அந்தச் சங்கடத்திலிருந்து சிவனைக் காப்பார்றுவதற்காகத் திருமால் போயிருக்கலாம்" என்றான் நம்பி. "திரிபுர சம்ஹாரத்தின் போது திருமால் அடைந்த கர்வபங்கம் இந்த வைஷ்ணவனுக்கு ஞாபகம் இல்லை போலிருக்கிறது!" என்றார் சைவப் பெரியார். "சுவாமிகளே! நீங்கள் எதற்காகத்தான் இப்படிச் சண்டை போடுகிறீர்களோ, தெரியவில்லை! யாருக்கு எந்தத் தெய்வத்தின் பேரில் பக்தியோ, அந்தத் தெய்வத்தை வழிபடுவதுதானே?" என்றான் வந்தியத்தேவன். சைவப் பெரியாரும் ஆழ்வார்க்கடியானும் ஏன் அவ்விதம் சண்டையிட்டார்கள்? வீர நாராயணபுரத்தில் ஏன் இதே மாதிரியான வாதப் போர் நடந்தது என்பதைப் பற்றி வாசகர்களுக்கு இச்சமயத்தில் சொல்லிவிடுவது உசிதமாயிருக்கும். பழந் தமிழ்நாட்டில் ஏறக்குறைய அறுநூறு வருஷ காலம் பௌத்த மதமும் சமண மதமும் செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்தச் செல்வாக்கினால் தமிழகம் பல நலங்களை எய்தியது. சிற்பம், சித்திரம், கவிதை, காவியம் முதலிய கலைகள் தழைத்தோங்கின. பின்னர், ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றினார்கள். அமுதொழுகும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்களைப் பொழிந்தார்கள். வைஷ்ணவத்தையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்தார்கள். இவர்களுடைய பிரச்சார முறை மிகச்சக்தி வாய்ந்ததாயிருந்தது.
Embed this episode
NOW PLAYING
PS-S1E12-பொன்னியின் செல்வன்/E12-நந்தினி(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Nandhini / Puthu Vellam
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.