EPISODE · Aug 1, 2022 · 15 MIN
PS-S1E13-பொன்னியின் செல்வன்/E13-வளர்பிறைச் சந்திரன்(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Valarpirai Chandiran / Puthu Vellam
from இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் · host RJ SHAKTHI
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Valarpirai Chandiran இளவரசிகளின் ரதம் கண்ணுக்கு மறைந்த பிறகு, சோதிடர் வந்தியத்தேவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். தம்முடைய ஆஸ்தான பீடத்தில் அமர்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த அவ்வாலிபனையும் உட்காரச் சொன்னார்; அவனை ஏற இறங்கப் பார்த்தார். "தம்பி! நீ யார்? எங்கே வந்தாய்?" என்று கேட்டார், வந்தியத்தேவன் சிரித்தான். "என்னப்பா, சிரிக்கிறாய்?" "இல்லை, தாங்கள் இவ்வளவு பிரபலமான ஜோதிடர் என்னை கேள்வி கேட்கிறீர்களே? நான் யார், எதற்காகத் தங்களிடம் வந்தேன் என்று ஜோதிடத்திலேயே பார்த்துக் கொள்ளக் கூடாதா?" "ஓகோ! அதற்கென்ன? பார்த்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கு நானே ஜோசியம் பார்த்துக் கொண்டால், தட்சிணை யார் கொடுப்பார்கள் என்றுதான் யோசிக்கிறேன்." வந்தியத்தேவன் புன்னகை செய்து விட்டு, "ஜோதிடரே! இப்போது இங்கே வந்துவிட்டுப் போனார்களே? அவர்கள் யார்?" என்று கேட்டான். "ஓ! அவர்களா? நீ யாரைப் பற்றிக் கேட்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. தெரியும் தம்பி, தெரியும்! நீ என் சீடனைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது இங்கே இருந்தார்களே, அவர்களைப் பற்றித்தான் கேட்கிறாய், இல்லையா? ரதத்தில் ஏறிக் கொண்டு, பின்னால் புழுதியைக் கிளப்பி விட்டுக் கொண்டு போனார்களே, அவர்களைப் பற்றித்தானே?" என்று குடந்தை சோதிடர் சுற்றி வளைத்துக் கேட்டார். "ஆமாம், ஆமாம்! அவர்களைப் பற்றித் தான் கேட்டேன்..." "நன்றாகக் கேள். கேட்க வேண்டாம் என்று யார் சொன்னது? அவர்கள் இரண்டு பேரும் இரண்டு பெண்மணிகள்!" "அது எனக்கே தெரிந்து போய்விட்டது; ஜோதிடரே! நான் குருடன் இல்லை. ஆண்களையும் பெண்களையும் நான் வித்தியாசம் கண்டு பிடித்து விடுவேன். பெண் வேடம் பூண்ட ஆணாயிருந்தால் கூட எனக்குத் தெரிந்து போய்விடும்." "பின்னே என்ன கேட்கிறாய்?.." "பெண்கள் என்றால், அவர்கள் இன்னார், இன்ன ஜாதி.." "ஓகோ! அதையா கேட்கிறாய்? பெண்களில் பத்மினி, சித்தினி, காந்தர்வி, வித்யாதரி என்பதாக நாலு ஜாதிகள் உண்டு. உனக்குச் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் கொஞ்சம் பயிற்சி இருக்கும் போலிருக்கிறது. அந்த நாலு ஜாதிகளில் இவர்கள் பத்மினி, காந்தர்வி ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்." "கடவுளே!..." "ஏன்? அப்பனே!" "கடவுளை நான் கூப்பிட்டால், நீங்கள் 'ஏன்?' என்று கேட்கிறீர்களே?" "அதில் என்ன பிசகு? கடவுள் சர்வாந்தர்யாமி என்று நீ கேட்டதில்லையா? பெரியவர்களுடைய சகவாசம் உனக்கு அவ்வளவாகக் கிடையாது போலிருக்கிறது! எனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான்; உனக்குள்ளே இருப்பவரும் கடவுள் தான். நீ இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாயே அந்த என் சீடனுக்குள்ளே இருப்பவரும் கடவுள்தான்..." "போதும், போதும், நிறுத்துங்கள்." "இத்தனை நேரம் பேசச் சொன்னதும் கடவுள்தான்; இப்போது நிறுத்தச் சொல்வதும் கடவுள்தான்!" "ஜோதிடரே! இப்போது இங்கேயிருந்து போனார்களே, அந்தப் பெண்கள் யார், எந்த ஊர், என்ன குலம், என்ன பெயர், என்று கேட்டேன். சுற்றி வளைக்காமல் மறுமொழி சொன்னால்.." "சொன்னால் எனக்கு நீ என்ன தருவாய் அப்பனே!" "என் வந்தனத்தைத் தருவேன்." "உன் வந்தனத்தை நீயே வைத்துக்கொள். ஏதாவது பொன்தானம் கொடுப்பதாயிருந்தால் சொல்லு!" "பொன்தானம் கொடுத்தால் நிச்சயமாய்ச் சொல்லுவீர்களா?" "அதுவும் சொல்லக்கூடியதாயிருந்தால்தான் சொல்லுவேன்! தம்பி! இதைக் கேள். ஜோதிடன் வீட்டுக்குப் பலரும் வந்து போவார்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லக் கூடாது. இப்போது போனவர்களைப் பற்றி உன்னிடம் சொல்ல மாட்டேன். உன்னைப் பற்றி வேறு யாராவது கேட்டால் அவர்களுக்கும் உன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேன்." "ஆகா! ஆழ்வார்க்கடியான்நம்பி தங்களைப் பற்றிச் சொன்னது முற்றும் உண்மைதான்." "ஆழ்வார்க்கடியாரா? அவர் யார், அப்படி ஒருவர்?" "தங்களுக்குத் தெரியாதா, என்ன? ரொம்பவும் தங்களைத் தெரிந்தவர்போல் பேசினாரே? ஆழ்வார்க்கடியான் நம்பி என்று கேட்டதேயில்லையா?" "ஒருவேளை ஆளைத் தெரிந்திருக்கும்; பெயர் ஞாபகம் இராது கொஞ்சம் அடையாளம் சொல்லு, பார்க்கலாம்!" "கட்டையாயும் குட்டையாயும் இருப்பார், முன் குடுமி வைத்திருப்பார். இளந்தொந்தியில் வேட்டியை இறுக்கிக் கட்டியிருப்பார். சந்தனத்தைக் குழைத்து உடம்பெல்லாம் கீழிருந்து மேலாக இட்டிருப்பார். சைவர்களைக் கண்டால் சண்டைக்குப் போவார். அத்வைதிகளைக் கண்டால் தடியைத் தூக்குவார். சற்றுமுன்னால் 'நீயும் கடவுள், நானும் கடவுள்' என்றீர்களே, இதை ஆழ்வார்க்கடியான் கேட்டிருந்தால் 'கடவுளைக் கடவுள் தாக்குகிறது!' என்று சொல்லித் தடியினால் அடிக்க வருவார்..."
Embed this episode
NOW PLAYING
PS-S1E13-பொன்னியின் செல்வன்/E13-வளர்பிறைச் சந்திரன்(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Valarpirai Chandiran / Puthu Vellam
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.