EPISODE · Aug 21, 2022 · 16 MIN
PS-S1E23-பொன்னியின் செல்வன்/E23-அமுதனின் அன்னை(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Amuthanin Annai / Puthu Vellam
from இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் · host RJ SHAKTHI
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Amuthanin Annai -- வேளக்கார வீரர் படை பெரிய கடைவீதியின் வழியாகப் போயிற்று. படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். ஒருவன் ஒரு பட்சணக் கடையில் புகுந்து ஒரு கூடை நிறைய அதிரசத்தை எடுத்துக் கொண்டு வந்து மற்ற வீரர்களுக்கு விநியோகித்தான். பிறகு வெறும் கூடையைக் கடைக்காரனுடைய தலையிலே கவிழ்த்த போது, வீரர்களும் வீதியில் சென்றவர்களும் 'ஹஹ்ஹஹ்ஹா' என்று இரைந்து சிரித்தார்கள். இன்னொரு வீரன் வழியில் எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டியின் கையிலிருந்த பூக்கூடையைப் பிடுங்கினான். பூவையெல்லாம் வாரி இறைத்துக் கொண்டே "பூமாரி பொழிகிறதடா!" என்றான். அவன் வாரி வீசிய பூக்களைப் பிடிக்க முயன்ற வீரர்கள் குதித்தும் சிரித்தும் கொம்மாளமடித்தார்கள். எதிரில் வந்த ஒரு மாட்டு வண்டியை இன்னொரு வீரன் நிறுத்தி, மாட்டை வண்டியிலிருந்து பூட்டு அவிழ்த்து விரட்டி அடித்தான். மாடு மிரண்டு மக்கள் கூட்டத்திடையே புகுந்து சிலரைத் தள்ளிக் கொண்டு ஓடியது; மீண்டும் ஒரே கோலாகலச் சிரிப்புத்தான்! இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன், "ஆகா! பழுவேட்டரையரின் வீரர்களைப் போல் இவர்களும் விளையாடுகிறார்கள். இவர்களுடைய விளையாட்டு மற்றவர்களுக்கு வினையாக இருக்கிறது. நல்லவேளை, இவர்களுடைய பார்வை நம்மீது விழாமல் ஒதுங்கி நின்றோம். இல்லாவிடில் ஒரு சண்டை ஏற்பட்டிருக்கும். வந்த காரியம் கெட்டுப் போயிருக்கும்" என்று எண்ணிக் கொண்டான். ஆனால் ஒரே ஒரு வித்தியாசமும் அவனுக்குப் புலனாயிற்று. வேளக்காரப் படை வீரர்களின் விளையாடல்களை இங்குள்ள ஜனங்கள் அவ்வளவாக வெறுக்கவில்லை. அவர்களுடைய கொம்மாளத்தில் ஜனங்களும் சேர்ந்து சிரித்துக் குதூகலித்தார்கள்! இதைப் பற்றிக் கேட்கலாம் என்று திரும்பிப் பார்த்தபோது பூக்குடலைகளுடன் நின்ற சிறுவனை வந்தியத்தேவன் காணவில்லை. கூட்டத்திலும் கோலாகலத்திலும் அந்த வாலிபன் எங்கேயோ போய் விட்டான். ஒருவேளை அவனுடைய வேலையைப் பார்க்கப் போயிருக்கக்கூடும். வேளக்காரப் படை மாலையில் கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு மற்ற யாரையும் உள்ளே விடுவதில்லையென்று வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். இரவு பகல் எந்த நேரத்திலும் கோட்டைக்குள் பிரவேசிக்கும் உரிமை பெற்றவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அமைச்சர்களும், தண்டநாயகர்களுந்தான். பழுவேட்டரையர்களின் குடும்பத்தாருக்கும் அவ்வுரிமை உண்டு என்று வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான். எனவே, இராத்திரியே கோட்டைக்குள் போக வேண்டும் என்ற உத்தேசம் அவனுக்கு மாறி விட்டது. தன்னிடமிருந்த இலச்சினை மோதிரத்தைக் காட்டிச் சோதனை செய்ய வந்தியத்தேவன் விரும்பவில்லை. அதை விட இரவு கோட்டைக்கு வெளியிலேயே தங்கி நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு நாளை உதயத்துக்குப் பிறகு கோட்டைக்குள் செல்வதே நல்லது. இராத்திரியில் அப்படியே கோட்டைக்குள் பிரவேசித்தாலும் அரசரைத் தரிசித்து ஓலை கொடுப்பது இயலாத காரியமேயல்லவா? கோட்டை மதிலைச் சுற்றிலும் இருந்த வீதிகளின் வழியாக வந்தியத்தேவன் வேடிக்கை பார்த்துக் கொண்டே மெதுவாகச் சென்றான். அன்று பல காத தூரம் பிரயாணம் செய்திருந்த அவனுடைய குதிரை மிகக் களைத்திருந்தது. சீக்கிரத்தில் அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டியதுதான். இல்லாவிடில் நாளைக்கு அவசியம் ஏற்படும் போது இக்குதிரையினால் பயனில்லாமல் போய் விடும்! வசதியாகத் தங்குவதற்கு ஓரிடம் விரைவில் கண்டுபிடித்தாக வேண்டும்! தஞ்சைபுரி அப்போது புதிதாகப் பல்கிப் பெருகிப் பரந்து வளர்ந்து கொண்டிருந்த நகரம். அதிலும் அப்போது மாலை நேரம்; நூற்றுக்கணக்கான வீதி விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிவீசத் தொடங்கியிருந்தன. வீதிகளெல்லாம் 'ஜே, ஜே' என்று ஒரே ஜனக் கூட்டம். வெளியூர்களிலிருந்து பல அலுவல்களின் நிமித்தமாக வந்தவர்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் சோழ நாட்டுப் பட்டணங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வந்தவர்களும் இருந்தார்கள். புதிதாக சோழ சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த நாடுகளிலிருந்து வந்தவர்களும் காணப்பட்டார்கள். பொருணை நதியிலிருந்து பாலாற்றங்கரை வரையிலும் கீழைக் கடற்கரையிலிருந்து மேற்குக் கடற்கரை வரையிலும் பரந்திருந்த தேசங்களிலிருந்து தலைநகருக்குப் பலர் வந்திருந்தார்கள். விந்திய மலைக்கு வடக்கேயிருந்து வந்தவர்களும் கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்தவர்களுங்கூடச் சிலர் அம்மாநகரின் வீதிகளில் ஆங்காங்கே தோன்றினார்கள். ஆப்பம், அதிரசம் முதலிய தின்பண்டங்கள் விற்ற கடைகளில் மக்கள் ஈ மொய்ப்பது போல் மொய்த்து, அப்பண்டங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். வாழைப் பழங்களும் வேறு பலவிதக் கனிகளும் மலை மலையாகக் குவிந்து கிடந்தன. பூக் கடைகளைப் பற்றியோ சொல்ல
Embed this episode
NOW PLAYING
PS-S1E23-பொன்னியின் செல்வன்/E23-அமுதனின் அன்னை(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Amuthanin Annai / Puthu Vellam
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.