EPISODE · Aug 22, 2022 · 10 MIN
PS-S1E24-பொன்னியின் செல்வன்/E24-காக்கையும் குயிலும்(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Kakkayum Kuyilum / Puthu Vellam
from இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் · host RJ SHAKTHI
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Kakkayum Kuyilum-- இரவெல்லாம் கட்டையைப் போல் கிடந்து தூங்கிவிட்டுக் காலையில் சூரியன் உதித்த பிறகே வந்தியத்தேவன் துயிலெழுந்தான். விழித்துக் கொண்ட பிறகும் எழுந்திருக்க மனம் வராமல் படுத்திருந்தான். மேலக்காற்று விர்ரென்று வீச, மரஞ்செடிகளின் கிளைகளும் இலைகளும் ஒன்றோடொன்று உராய்ந்து 'சோ' என்ற சத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அந்தச் சுருதிக்கிணங்க, ஓர் இளம் பிள்ளையின் இனிய குரல் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடலைப் பண்ணுடன் பாடியது. "பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!" இதைக் கேட்ட வந்தியத்தேவன் கண்ணை விழித்துப் பார்த்தான். அவனுக்கெதிரே பூந்தோட்டத்தில் கொன்னை மரங்கள் சரஞ்சரமாகப் பொன் மலர்களைத் தொங்கவிட்டுக் கொண்டு காட்சியளித்தன. சேந்தன் அமுதன் ஒரு கையில் குடலையும் இன்னொரு கையில் அலக்கும் வைத்துக் கொண்டு, வாயினால் பாடிக் கொண்டே, கொன்றை மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தான். அதிகாலையிலே எழுந்து ஸ்நானம் செய்து திருநீறு புனைந்திருந்த சேந்தன் அமுதன், சிவபக்தனாகிய மார்க்கண்டனைப் போல் தோன்றினான். இப்படி இனிமையாகவும் அழகாகவும் பாடும் பிள்ளையின் குரலைக் கேட்க அவனுடைய அன்னை கொடுத்து வைக்கவில்லையே என்ற எண்ணத்துடன் வந்தியத்தேவன் எழுந்தான். அமுதனைப் போல் தானும் பூந்தோட்டம் வளர்த்துச் சிவ கைங்கரியம் செய்து கொண்டு ஏன் ஆனந்தமாய்க் காலங் கழிக்கக் கூடாது? எதற்காகக் கையில் வாளும் வேலும் ஏந்திக் கொண்டு ஊர் ஊராக அலைய வேண்டும்? எந்த நேரமும் பிறரைக் கொல்லுவதற்கும் பிறரால் கொல்லப்படுவதற்கும் ஆயத்தமாக ஏன் திரிய வேண்டும்? இத்தகைய எண்ணங்கள் அவன் மனத்தில் உதித்தன. ஆனால் சிறிது நேரத்தில் மனம் மாறியது. சேந்தன் அமுதனைப் போல் உலகில் எல்லாருமே சிவ பக்தர்களாயிருந்து விடுவார்களா? திருடர்களும் கொள்ளைக்காரர்களும் வஞ்சகர்களும் எளியவர்களைத் துன்புறுத்துவதில் களிப்படைகிறவர்களும் இருக்கத்தான் இருப்பார்கள். இவர்களையெல்லாம் அடக்கி, நியாயத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட அரசாங்கம் வேண்டும். அரசாங்கம் நடத்த அரசர்களும் அமைச்சர்களும் வேண்டும். இவர்களுக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேளக்காரப் படைகளும் வேண்டும். தன்னைப் போல் அரசர்களும் ஓலை கொண்டு போகவும் ஆட்கள் வேண்டும்.... ஆம்! இன்று சுந்தர சோழ சக்கரவர்த்தியைப் பார்த்தே தீரவேண்டும். பெரிய பழுவேட்டரையர் திரும்பி வருவதற்குள் சக்கரவர்த்தியைப் பார்த்தால்தான் பார்த்தது. அவர் வந்து விட்டால் அது சாத்தியமில்லாமலே போகலாம்.... பூந்தோட்டத்துக்குப் பக்கத்திலேயிருந்த தாமரைக் குளத்தில் குளித்து விட்டு வந்து, வல்லவரையன் ஆடை ஆபரணங்கள் அணிந்து தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டான். சக்கரவர்த்தியைத் தரிசனம் செய்யப் போகும்போது சாதாரணமாகப் போகலாமா? இதற்காகத் தான் அலங்கரித்துக் கொண்டானா, அல்லது பழுவூர் இளையராணியை அன்று மீண்டும் பார்க்கப் போகிறோம் என்கிற எண்ணமும் அவன் மனத்திற்குள் இருந்ததா என்று நாம் சொல்ல முடியாது. காலை உணவுக்குப் பிறகு சேந்தன் அமுதன் உச்சிவேளை பூஜைக் கைங்கரியத்துக்காகப் பூக்குடலையுடன் கிளம்ப, வந்தியத்தேவன் சக்கரவர்த்தியின் தரிசனத்துக்காகப் புறப்பட்டான் இருவரும் நடந்தே சென்றார்கள். கோட்டைக்குள் குதிரையைக் கொண்டு போக வேண்டாம் என்று வல்லவரையன் முன்னமேயே தீர்மானித்திருந்தான். குதிரை நன்றாக இளைப்பாற அவகாசம் கொடுப்பது அவசியம். சீக்கிரத்தில் அக்குதிரையை, தான் துரிதப் பிரயாணத்துக்கு உபயோகப்படுத்த வேண்டி வரலாம், யார் கண்டது? எப்படியானாலும், அது இங்கே இருப்பதுதான் நல்லது. கோட்டை வாசல் போய்ச் சேரும் வரையில் அமுதனுடன் பேச்சுக் கொடுத்து இன்னும் சில விவரங்களைத் தெரிந்து கொண்டான். "உன் அன்னையைத் தவிர உனக்கு வேறு உற்றார் உறவினர் யாரும் கிடையாதா?" என்று வல்லவரையன் கேட்டதற்கு அமுதன் கூறியதாவது; "இருக்கிறார்கள், என் அன்னையுடன் கூடப் பிறந்த ஒரு தமக்கையும் தமையனும் உண்டு. தமக்கை காலமாகி விட்டாள்; தமையனார் கோடிக்கரைக் குழகர் கோயிலில் புஷ்ப கைங்கரியம் செய்கிறார். அத்துடன் இரவு நேரங்களில் கலங்கரை விளக்கத்தில் தீபமேற்றிப் பாதுகாக்கும் பணியும் செய்து வருகிறார்... அவருக்கு ஒரு புதல்வனும் புதல்வியும் உண்டு; புதல்வி..." என்று நிறுத்தினான். "புதல்விக்கு என்ன?" "ஒன்றுமில்லை எங்கள் குடும்பத்திலேயே ஒரு விசித்திரம். சிலர் ஊமையாகப் பிறப்பார்கள்; மற்றவர்கள் இனிய குரல் படைத்திருப்பார்கள்; நன்றாய்ப் பாடுவார்கள்..." "உன் மாமனின் மகள் ஊமை இல்லையே?" என்றான் வந்தியத்தேவன். "இல்லை, இல்லை!"
Embed this episode
Ready to play
PS-S1E24-பொன்னியின் செல்வன்/E24-காக்கையும் குயிலும்(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Kakkayum Kuyilum / Puthu Vellam
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.