EPISODE · Jul 20, 2022 · 11 MIN
PS-S1E4-பொன்னியின் செல்வன்/E4-கடம்பூர் மாளிகை(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Kadamboor Maligai / Puthu Vellam
from இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் · host RJ SHAKTHI
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இருபுறத்திலும் எழுந்த நெடுஞ்சுவர்கள் கோட்டைச் சுவர்களைப் போலவே வளைந்து சென்றன. கோட்டை வாசலில் யானைகளும், குதிரைகளும், ரிஷபங்களும், அந்த மிருகங்களையெல்லாம் பிடித்துக் கட்டுவோரும், தீனி வைப்போரும், தண்ணீர் காட்டுவோரும், ஆங்காங்கு தீவர்த்தி தூக்கிப் பிடித்து வெளிச்சம் போடுவோரும், தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது. இதையெல்லாம் பார்த்த வல்லவரையனின் உள்ளத்தில் சிறிது தயக்கமும் துணுக்கமும் ஏற்பட்டன. 'ஏதோ இங்கே பெரிய விசேஷம் ஒன்று நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் நாம் வந்து சேர்ந்தோமே' என்று எண்ணினான். நடக்கும் விசேஷம் என்னவென்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் ஆவலும் ஒருபக்கம் பொங்கிக் கொண்டிருந்தது. கோட்டை வாசற் கதவுகள் திறந்துதானிருந்தன. ஆனால் திறந்திருந்த வாசலில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்தால் யமகிங்கரர்களைப் போலிருந்தது. தயங்கி நின்றால் தன்னை அவர்கள் நிறுத்திவிடுவார்கள் என்றும் தைரியமாகக் குதிரையை விட்டுகொண்டு உள்ளே போவதுதான் உசிதம் என்றும் அந்த வீர வாலிபன் எண்ணினான். அந்த எண்ணத்தை உடனே காரியத்தில் நிறைவேற்றினான். ஆனால் என்ன ஏமாற்றம்? குதிரை கோட்டை வாசலை அணுகியதும் வேல் பிடித்த வீரர்கள் இருவர் தங்கள் வேல்களைக் குறுக்கே நிறுத்தி வழிமறித்தார்கள். இன்னும் நாலு பேர் வந்து குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்தான். இன்னொருவன் தீவர்த்தி கொண்டுவந்து உயரத் தூக்கி முகத்துக்கு நேரே பிடித்தான். வல்லவரையன் முகத்தில் கோபம் கொதிக்க, "இதுதான் உங்கள் ஊர் வழக்கமா? வந்த விருந்தாளிகளை வாசலிலேயே தடுத்து நிறுத்துவது....?" என்றான். "நீ யார் தம்பி இவ்வளவு துடுக்காகப் பேசுகிறாய்? எந்த ஊர்? என்றான் வாசற்காவலன்." "என் ஊரும் பேருமா கேட்கிறாய்? வாணகப்பாடி நாட்டுத் திருவல்லம் என் ஊர். என்னுடைய குலத்து முன்னோர்களின் பெயர்களை ஒரு காலத்தில் உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள்! என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன்! தெரிந்ததா?" என்றான். "இவ்வளவையும் சொல்வதற்கு ஒரு கட்டியக்காரனையும் கூட அழைத்து வருவதுதானே?" என்றான் காவலர்களில் ஒருவன். இதைக் கேட்ட மற்றவர்கள் சிரித்தார்கள். "நீ யாராயிருந்தாலும் இனி உள்ளே போக முடியாது! இன்றைக்கு வரவேண்டிய விருந்தாளிகள் எல்லாம் வந்தாகிவிட்டது. இனிமேல் யாரையும் விடவேண்டாம் என்று எஜமானின் கட்டளை!" என்றான் காவலர் தலைவன். ஏதோ வாக்குவாதம் நடக்கிறதைப் பார்த்துக் கோட்டைக்குள்ளே சற்று தூரத்தில் நின்ற சில வீரர்கள் அருகில் வந்தார்கள். அவர்களில் ஒருவன், "அடே! நாம் அங்கே திருவிழாக் கூட்டத்தில் விரட்டியடித்தோமே, அந்தக் குருதை போல இருக்கிறதடா!" என்றான். இன்னொருவன் "கழுதை என்று சொல்லடா" என்றான். "கழுதை மேல் உட்கார்ந்திருக்கிறவன் என்ன விறைப்பாக உட்கார்ந்திருக்கிறான் பாரடா!" என்றான் மற்றொருவன். வல்லவரையன் காதில் இந்தச் சொற்கள் விழுந்தன. அவன் மனதிற்குள், "என்னத்திற்கு வீண் வம்பு? திரும்பிப் போய் விடலாமா? அல்லது, இளவரசர் ஆதித்த கரிகாலரின் முத்திரை பதித்த இலச்சினையை இவர்களிடம் காட்டிவிட்டு உள்ளே போகலாமா?" என்ற யோசனை தோன்றி இருந்தது. வடதிசைப் படையின் மாதண்ட நாயகராகிய இளவரசரின் இலச்சினையைப் பார்த்துவிட்டுத் தன்னைத் தடுக்கக்கூடியவர்கள் வடபெண்ணையிலிருந்து குமரிமுனை வரையில் யாரும் கிடையாது அல்லவா? இப்படி அவன் மனத்திற்குள் விவாதித்துக் கொண்டிருந்தபோதுதான் பழுவேட்டரையர் ஆட்களின் கேலிப் பேச்சு அவன் காதில் விழுந்தது. உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டான். "குதிரையை விடுங்கள்; திரும்பிப் போகிறேன்!" என்றான். தடுத்த வீரர்கள் குதிரையின் முகக்கயிற்றை விட்டார்கள்.
Embed this episode
NOW PLAYING
PS-S1E4-பொன்னியின் செல்வன்/E4-கடம்பூர் மாளிகை(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Kadamboor Maligai / Puthu Vellam
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.