EPISODE · Jul 26, 2022 · 13 MIN
PS-S1E8-பொன்னியின் செல்வன்/E8-பல்லக்கில் யார்?(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Pallakkil Yaar? / Puthu Vellam
from இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் · host RJ SHAKTHI
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Pallakkil Yaar? -- சற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தெளிவாக விழவில்லை. சம்புவரையர் உரத்த குரலில், " பழுவூர் மன்னர் கேட்டதற்கு நாம் மறுமொழி சொல்ல வேண்டாமா? தலைக்குத் தலை பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆகிறது? இரவு மூன்றாம் ஜாமம் ஆரம்பமாகி விட்டது. அதோ சந்திரனும் வந்து விட்டது" என்றான். "எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. என்னைப் போல் இன்னும் சிலருடைய மனத்திலும் அது இருக்கலாம். பழுவூர்த்தேவர் கோபித்துக் கொள்வதில்லையென்றால், அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன்!" என்று முன்னால் ஒரு தடவை பேசிய கம்மல் குரல் சொல்லிற்று. "இப்போது பேசுகிறது வணங்காமுடியார் தானே? எழுந்து நன்றாக வெளிச்சத்திற்கு வரட்டும்!" என்றார் பழுவேட்டரையர். "ஆமாம்; நான் தான் இதோ வெளிச்சத்துக்கு வந்து விட்டேன். "என்னுடைய கோபத்தையெல்லாம் நான் போர்க்களத்தில் காட்டுவதுதான் வழக்கம்; பகைவர்களிடம் காட்டுவது வழக்கம்; என் சிநேகிதர்களிடம் காட்டமாட்டேன். ஆகையால் எது வேண்டுமானாலும் மனம் விட்டுத் தாராளமாகக் கேட்கலாம்." "அப்படியானால் கேட்கிறேன், சுந்தரசோழ மகாராஜாவின் பேரில் பழுவேட்டரையர் என்ன குற்றம் சொல்கிறாரோ, அதே குற்றத்தைப் பழுவேட்டரையர் மீதும் சிலர் சுமத்துகிறார்கள்! அதை நான் நம்பாவிட்டாலும் இந்தச் சமயத்தில் கேட்டுத் தெளிய விரும்புகிறேன்!" என்றார் வணங்காமுடியார். "அது என்ன? எப்படி? விவரம் சொல்ல வேணும்?" "பழுவூர்த்தேவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை மணம் புரிந்து கொண்டது நம் எல்லோருக்கும் தெரியும்..." இச்சமயம், சம்புவரையரின் குரல் கோபத்தொனியில், "வணங்காமுடியார் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நம் மாபெருந் தலைவரை, நமது பிரதம விருந்தாளியை, இவ்விதம் அசந்தர்ப்பமான கேள்வி கேட்பது சிறிதும் தகாத காரியம்..." என்றார். "சம்புவரையரைப் பொறுமையாயிருக்கும்படி நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன். வணங்காமுடியார் கேட்க விரும்புவதைத் தாராளமாகக் கேட்கட்டும். மனத்தில் ஒன்றை வைத்துக் கொண்டிருப்பதைவிடக் கீறிக் கேட்டு விடுவதே நல்லது. ஐம்பத்தைந்து பிராயத்துக்கு மேல் நான் ஒரு பெண்ணை மணந்து கொண்டது உண்மைதான். அதைத் தாராளமாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான்தான் கலியுக ராமாவதாரம் என்று எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. ஏகபத்தினி விரதம் கொண்டவன் என்றும் சொல்லிக் கொண்டதில்லை. அந்தப் பெண்ணை நான் காதலித்தேன்; அவளும் என்னைக் காதலித்தாள். பழந்தமிழ்நாட்டு முறைப்படி இஷ்டப்பட்டு மணந்து கொண்டோம் இதில் என்ன தவறு?" "ஒரு தவறும் இல்லை!" என்று பல குரல்கள் எழுந்தன. "மணம் புரிந்து கொண்டது தவறு என்று நானும் சொல்லவில்லை. நம்மில் யார்தான் ஒரு தார விரதம் கொண்டவர்கள்? ஆனால்....ஆனால்..." "ஆனால் என்ன! தயங்காமல் மனத்தைத் திறந்து கேட்டு விடுங்கள்!" "புது மணம் புரிந்து கொண்ட இளைய ராணியின் சொல்லை எல்லா காரியங்களிலும் பழுவேட்டரையர் கேட்டு நடப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். இராஜரீக காரியங்களில் கூட இளைய ராணியின் யோசனையைக் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். தாம் போகுமிடங்களுக்கெல்லாம் இளைய ராணியையும் அழைத்துப் போவதாகச் சொல்லுகிறார்கள்." இப்போது கூட்டத்தில் ஒரு சிரிப்புச் சப்தம் எழுந்தது. சம்புவரையர் குதித்து எழுந்து, "சிரித்தது யார்? உடனே முன் வந்து சிரித்ததற்குக் காரணம் சொல்லட்டும்!" என்று கர்ஜித்துக் கத்தியை உறையிலிருந்து உருவினார். "நான்தான் சிரித்தேன்! பதற வேண்டாம் சம்புவரையரே!" என்றார் பழுவேட்டரையர். பிறகு, "வணங்காமுடியாரே! தாலி கட்டி மணந்த மனைவியை நான் போகுமிடத்துக்கெல்லாம் அழைத்துப் போவது குற்றமா? அவ்விதம் நான் பல இடங்களுக்கு அழைத்துப் போவது உண்மைதான். ஆனால் ராஜரீக காரியங்களில் இளையராணியின் யோசனையைக் கேட்கிறேன் என்று சொல்வது மட்டும் பிசகு. அவ்விதம் நான் ஒரு நாளும் செய்வதில்லை..." "அப்படியானால், இன்னும் ஓரே ஒரு சந்தேகத்தை மட்டும் நிவர்த்தி செய்யும்படி பழுவூர்த்தேவரை வேண்டிக் கொள்கிறேன். அந்தப்புரத்தில் இருந்திருக்க வேண்டிய பல்லக்கு இங்கே நாம் அந்தரங்க யோசனை செய்யும் இடத்திற்கு ஏன் வந்திருக்கிறது? பல்லக்கிற்குள்ளே யாராவது இருக்கிறார்களா; இல்லையா? இல்லையென்றால் சற்று முன்பு கேட்ட கனைப்புச் சத்தமும், வளையல் குலுங்கும் சத்தமும் எங்கிருந்து வந்தன?"
Embed this episode
NOW PLAYING
PS-S1E8-பொன்னியின் செல்வன்/E8-பல்லக்கில் யார்?(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Pallakkil Yaar? / Puthu Vellam
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.